Thursday 9 August 2012

டில்லியில் "வெள்ளி' நாயகன்! * ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு


புதுடில்லி: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று, தாயகம் திரும்பிய இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமாருக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்திய ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றுகிறார் விஜய குமார். இவர் லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் .நேற்று இவர் தாயகம் திரும்பினார். டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய இவருக்கு, ராணுவத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் ராணுவ தலைமையகத்திற்கு திறந்த ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது விஜய் குமார் அளித்த பேட்டி:
 தாயகம் திரும்பிய எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2006, 2010 காமன்வெல்த் போட்டி மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளேன். எனக்குரிய அங்கீகாரம், பதவி உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கிறேன்.
பதக்கம் வென்றவுடன் பல இடங்களில் இருந்து சலுகைகள் வருகின்றன. ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் பதவி வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சரே அறிவித்தார். ஆனால் என் எதிர்பார்ப்பு எல்லாம் ராணுவத்தின் சார்பில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான். தற்போது சிறிய அளவில் ஓய்வு தேவைப்படுகிறது. பின், 2016ல் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் சாதிக்க பயிற்சியில் ஈடுபடுவேன்.
இவ்வாறு விஜய் குமார் கூறினார்.
விஜய் குமாரின் தந்தையும், முன்னாள் ராணுவ சுபேதாரருமான பன்கு ராம் கூறுகையில்,"" கடின உழைப்பினால் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். இதற்காக வீட்டின் தொலைதூரத்தில் அவர் பயிற்சி மேற்கொண்டார். ராணுவத்தில் பதவி உயர்வு வேண்டுமென்று கேட்டது, அவரின் முடிவு. இதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவரின் ராணுவ பணியால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,''என்றார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் ஆலோசகர் பல்ஜித் கூறுகையில்"" விஜய் குமார் மிகவும் அமைதியானவர். இவர் உறுதியாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்தேன். எங்களால் என்ன சலுகைகள் தர முடியமோ அதை உறுதியாக இவருக்கு தருவோம். இவரை பிரதமரிடம் அழைத்துச் செல்வோம். பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.விஜய் பாக்ஸ்...
ரூ. 20 லட்சம் பரிசு
ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றம் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் பரிசு அறிவித்துள்ளது.
இது குறித்து தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் வெளியிட்ட அறிக்கை: துப்பாக்கி சுடுதல் 25மீ., ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற விஜய் குமாருக்கு ரூ. 20 லட்சமும், 10மீ., ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற ககன் நரங்கிற்கு ரூ 15 லட்சமும் வழங்கப்படும். இதற்கான பாராட்டு விழாவை விரைவில் நடத்தவுள்ளோம். இதில் இப்பரிசுக்கான காசோலை அவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More