Thursday 6 September 2012

கிரிக்கெட்டில் சாதித்தது எப்படி * ரகசியத்தை சொல்கிறார் லட்சுமண்


புதுடில்லி: ""நெருக்கடியான நேரங்கள் தான் என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியது,'' என, ஓய்வு பெற்ற இந்திய வீரர் லட்சுமண் தெரிவித்தார்.

இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் லட்சுமண், 37. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற நிலையிலும், திடீரென ஓய்வை அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிகரமாக ஜொலித்தது எப்படி என, லட்சுமண் கூறியது:
எப்போதெல்லாம் அணி நெருக்கடியான நேரத்தில் தவிக்கிறதோ, அதுபோன்ற கடினமான சூழ்நிலையில் விளையாட எனக்கு அதிகம் பிடிக்கும். இதுதான் என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்தது. இதனால் தான் ஐதராபாத்தின் முக்கிய பேட்ஸ்மேனாக உருவெடுத்தேன் என்று நினைப்பதுண்டு.

சிக்கலான நேரங்களில் பொறுப்பெடுத்துக் கொண்டு, வழக்கத்துக்கு மாறாக அதிக திறமை வெளிப்படுத்துவேன். இப்படி நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடுவது தான் எனது பெரிய வலிமை.
வெற்றி முக்கியம்:
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திறமை இருக்கும். அது அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். பேட்ஸ்மேனாக இருந்து அணிக்கு தேவையான ரன்கள் எடுப்பது, கிடைக்கும் வாய்ப்புகளில் "கேட்ச்' செய்வது தான் எப்போதும் எனது வேலை. என்னை சிறப்பான பேட்டிங் திறனுள்ள வீரராக பார்த்த அனைவருக்கும் நன்றி.

சச்சின், கங்குலி, கும்ளே என, அனைவருமே என்னைக் கவர்ந்தனர். இந்த வீரர்கள் அனைவருமே, அணியின் கேப்டனாக இருந்தவர்கள். இவர்களது திறமை குறித்த அனுபவங்களை, "டிரசிங் ரூமில்' கேட்டுத் தெரிந்து கொள்வேன். இந்தியாவுக்காக தொடர்ந்து திறமை வெளிப்படுத்த வேண்டும் என்ற லட்சியம் மட்டுமே இவர்களிடம் இருந்தது.

சேவக் பிடிக்கும்:
இப்போதுள்ள வீரர்களில் சேவக்கின் பேட்டிங்கை ரசித்து பார்ப்பேன். ஏனெனில், ஒரு சிலநேரங்களில் இவர் நம்ப முடியாத அளவில் விளையாடுவார். இவருக்கு "பார்ம்' <உள்ளதோ இல்லையோ, சேவக் ஒரு திட்டத்துடன் தான் களத்தில் விளையாடுவார். இவரை நம்ப வேண்டும். சேவக் போல ஏன் விளையாட முடியவில்லை என நான் கூட வியந்தது உண்டு.
இவ்வாறு லட்சுமண் கூறினார்.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


கால்பந்து ரேங்கிங்:இந்தியா பின்னடைவு


புதுடில்லி: "பிபா' கால்பந்து ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணி 169வது இடத்துக்கு தள்ளப்பட்டது.


கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. சமீபத்தில் முடிந்த நேரு கோப்பை கால்பந்து பைனலில் கேமரூன் அணியை வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 105 புள்ளிகளுடன் 168வது இடத்தில் இருந்து 169வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வங்கதேசம் (170வது இடம்), பாகிஸ்தான் (177வது) உள்ளிட்ட ஆசிய அணிகள் தலா ஒரு இடம் பின்தங்கின. இலங்கை அணி 179வது இடத்தில் நீடிக்கிறது.

முதல் மூன்று இடங்களை முறையே ஸ்பெயின் (1617 புள்ளி), ஜெர்மனி (1437), இங்கிலாந்து (1274) அணிகள் தக்கவைத்துக் கொண்டன. போர்ச்சுகல் அணி (1232) ஒரு இடம் முன்னேறி நான்காவது இடம் பிடித்தது. உருகுவே (1217) ஒரு இடம் பின்தள்ளப்பட்டது. அடுத்த ஐந்து இடங்களில் முறையே இத்தாலி (1174), அர்ஜென்டினா (1121), நெதர்லாந்து (1044), குரோஷியா (1020), டென்மார்க் (1006) அணிகள் தொடர்கின்றன.

ஆசிய அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்தியாவுக்கு 32வது இடம் கிடைத்துள்ளது. வங்கதேசம் (33), பாகிஸ்தான் (35), இலங்கை (36) பின்தங்கி உள்ளன. முதல் மூன்று இடங்களில் ஜப்பான் (793), ஆஸ்திரேலியா (778), தென் கொரியா (763) அணிகள் உள்ளன.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


விசாகப்பட்டனத்தில் இந்திய கிரிக்கெட்அணி


விசாகப்பட்டனம்: "டுவென்டி-20' போட்டியில் மோதவுள்ள இந்தியா, நியூசிலாந்து அணியினர் விசாகப்பட்டனம் வந்து சேர்ந்தனர்.


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 0-2 என இழந்தது. அடுத்து இரு அணிகள் மோதும் இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. முதல் போட்டி வரும் 8ம் தேதி, விசாகப்பட்டனத்தில் நடக்கவுள்ளது.

இதில் பங்கேற்க இரு அணியினரும், பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் விசாகப்பட்டனம் வந்து சேர்ந்தனர். மொத்தம் 27 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட, ராஜசேகர ரெட்டி மைதானத்தில், 17 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளது. கேன்சருக்குப் பின் யுவராஜ் சிங் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளதால், விற்பனை துவங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இன்றும், நாளையும், காலை 10.00 முதல் 1.00 மணி வரை, அடுத்து 2.00 முதல் 5.00 மணி வரை, இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


யு.எஸ்., ஓபன்:அரையிறுதியில் அசரன்கா


நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு உலகின் "நம்பர்-1' வீராங்கனையான விக்டோரியா அசரன்கா முதல் முறையாக முன்னேறினார்.

 நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அசரன்கா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை சந்தித்தார். இதன் முதல் செட்டை 6-1 என அசரன்கா சுலபமாக கைப்பற்றினார். பின் இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட ஸ்டோசர் 6-4 என வென்றார்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அசரன்கா 7-6 என வென்றார். முடிவில் அசரன்கா 6-1, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்.

பெரர் முன்னேற்றம்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் <உலகின் "நம்பர்-4' வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரர், பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்குயிட்டை சந்தித்தார். முதல் இரண்டு செட்களையும் பெரர் 7-5, 7-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை 6-4 என வசப்படுத்தினார். இறுதியில் பெரர் 7-5, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி மழை குறுக்கிட்டதால் சுமார் 7 மணி நேரம் நீடித்தது. பிற போட்டிகள் மழை காரணமாக தடைபட்டது.



www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More